ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

உலகம் பொன்னானது!

நிறைவிலா நெஞ்சம் கொண்டு
  நிர்க்கதி யாகி வையச்
சிறையினை விட்டு நீங்க
  சிந்தனை தோன்ற உள்ளக்
குறையினை எண்ணி வெந்து
   குன்றதன் விளம்பில் செல்ல
இறைவனின் விந்தை யாக
   இயற்கையின் வண்ணம் கண்டேன்.


எதிரினில் கண்ட காட்சி
   என்மனம் ஈர்க்கும் விந்தை
புதிரெனத் தோன்றும் எங்கும்
   புவியெலாம் இன்பக் கோலம்
கதிர்விழும் கான கத்தில்
   களிப்புறு நீர்க் குளத்தின்
முதிர்ந்தநல் மரங்க ளாட
   முழுவதும் இனிமை கண்டேன்.


ஆநிரை துள்ளிச் செல்ல
   ஆழ்மனக் கண்ணின் முன்னம்
ஊனுடல் சிலிர்க்கும் எந்தன்
  ஊரெலாம் பசுமை கண்டேன்.
மேனியை மயக்கும் வண்ணம்
   மேலுயர் சாலை கண்டேன்.
வானிலே கயிற்றி லாடி
   வலம்வரும் மாந்தர் கண்டேன்.


விந்தையோ வித்தை இஃது
  விலையிலா இன்ப மாகும்
சிந்தையைக் கொள்ளை கொள்ளும்
   சிறப்புறு காட்சி யன்றோ?
அந்தவோர் மலையி னூடே
  அழகிய பசிய நீரில்
மந்தையாய் இல்லம் கொண்ட
  மக்களின் வாழ்வும் கண்டேன்.
  
கண்கொளாக் காட்சி யன்றோ
  கவினுறு இயற்கை ஆட்சி
கண்ணிலே பரவ சத்தை
   காட்டிடும் தீவு கண்டேன்.
எண்ணமே கவர்ந்து நிற்கும்
   எண்ணிலா தீபம் கண்டேன்.
பண்ணொடு பாடத் தூண்டும்
   பரவசம் தீண்ட நின்றேன்.


 இயற்கையாய் அழகு கொஞ்ச
    இன்னொரு புறத்தில் மாந்தர்
செயற்கையில் செய்த விந்தைச்
  செகத்தினை எண்ணு கின்றேன்.
மயக்கிடும் நீரின் பாதை
   மறைவினில் வண்டிச் சாலை.
வியக்கவே சுழன்று செல்லும்
   வினைமிகு பாலம் கண்டேன்.
   
இத்தனை செல்வம் மிக்க
   இத்தரை நீங்க லாமா?
முத்தென வாழ்ந்து காட்டி
   முத்திரை பதிக்க வேண்டும்
எத்தனை இன்ப முண்டோ
   அத்தனை முயல வேண்டும்.
நித்தமும் அன்பு பேணி
   நிறைவுடன் நீங்க லாமே!


மெய்ஞானி
என்ன வேலை?

தேனில்லா வனத்தினிலே
வண்டுக்கென்ன வேலை

நீரில்லா ஆற்றினிலே
நண்டுக்கென்ன வேலை

பெண்ணில்லா உலகினிலே
பொன்னுக்கென்ன வேலை

நாவில்லா வாயினிலே
சொல்லுக்கென்ன வேலை

ஆளில்லா நாட்டினிலே
நெல்லுக்கென்ன வேலை

ஆணில்லா ஊரினிலே
கன்னிக்கென்ன வேலை

அம்பில்லா கையினிலே
வில்லுக்கென்ன வேலை

அன்பில்லா தோளிலே
பிள்ளைக்கென்ன வேலை

மெய்ஞானி
கல்வி வெற்றி தரும்! 


கண்ணெதிரே கேடுகளைக் கண்டும் இங்கே
காணாமற்போல் செல்வார்போல் கடப்பார் உண்டு
பொன்னுதிர பேசிடுவோர் பேச்சில் ஆழ்ந்து
பொல்லாங்கும் செய்திடுவார் பொய்யர் இங்கே
விண்ணதிர உரையாற்றி வெற்றாய்ப் பேசும் 
வீணர்பலர் சொல்வதையே நம்பும் மூடர்
மண்ணுதிரப் போராடும் மல்யுத்தம் போல் 
மன்றாடும் மக்களினை மதியார் அன்றோ? 


வண்ணமுடன் வாழ்வின்றி வருந்தும் ஏழை 
வார்த்தைகளை யார்கேட்ப்பார் வருந்தார் யாரும்
உண்ணவுமே தன்னிடத்தில் ஒன்றும் இல்லார் 
உரைப்பதனைக் கேட்பதற்கு ஒருவர் உண்டோ? 
எண்ணமதில் தீவிரமாய் என்றும் நின்று 
எவ்வகையும் போராடி ஏற்றம் கண்டு 
திண்ணமுடன் நோக்கமதில் தளரா திங்கே 
திடமனத்தால்  வெல்பவர்க்கே தொல்லை விடுமே!


நண்ணியதோர் வாழ்க்கையினை நாளும் காண 
நடுக்கமறக் கற்பதுவே நன்மை கூட்டும் 
நுண்ணியதாய் எதனிலுமே நுட்பம் கண்டு 
நுரையற்ற தெளிநீர்போல் நூல்கள் கற்பீர்  
கண்ணயர்வோர் எந்நாளும் கரையே றாரே 
கருத்துடனே கல்லாதார்  காலம் வெல்லார் 
கண்ணியத்தை எந்நாளும் காத்தே நின்றோர்
கடுந்தடைகள் வந்தாலும் கடன்செய் வாரே!

மெய்ஞானி